தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் ரயில் அக்டோபர் 4 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இது தற்போதைக்கு லக்னோ முதல் டெல்லி வரை மட்டுமே இயங்குகிறது. இந்த ரயில் ஏறக்குறைய விமானத்தில் உள்ளது போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டதாக உள்ளது.
இது அறிமுகமானபோது ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால், பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் ரூ.100 இழப்பீடும், இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் 250 ரூபாய் வழங்கப்படும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.25 லட்சம் பயண காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இரண்டாம் கட்டமாக அகமதாபாத் முதல் மும்பை சென்ட்ரல் வரை ஜனவரி 17ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயிலும் பொதுமக்களை கவர திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பயணத்தின் போது, அவர்களது வீட்டில் திருட்டு நடந்தால், பயணிகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் விமானம் போன்றே அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.