கொரோனாத் தொற்றானது உலகம் முழுவதிலும் தலை விரித்தாடுகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் தற்போதைக்கு இருக்கும் தீர்வாக, சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல், மாஸ்க் பயன்படுத்துதல், கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் என இருந்து வருகின்றனர்.
மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்ட போதிலும், சமூக இடைவெளியினைக் கடைபிடிக்க வேண்டும் என்னும் பொருட்டு உலகின் பலநாடுகளில் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் உள்ள ஒரு பூங்காவில் சமூக இடைவெளியினைக் கடைபிடிக்க வலியுறுத்தி, ரோபோட் நாய் ஒன்று மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோட் மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்கிறது. இந்த ரோபோட் அனைத்து விதமான பரப்புகளிலும் பயணிக்க கூடியதாக உள்ளது.
ஸ்பாட் ரோபோட்டில் உள்ள சென்சார் மூலம் எதிரில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். மேலும் இது அவ்வப்போது, “உங்களுக்காகவும், உங்கள் அருகில் இருப்பவர்கள் நலனுக்காகவும் தயவு செய்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும். நன்றி.” என்று கூறி வருகிறது.