அடுத்த ஆண்டிற்குள் 5ஜி ஐபோன்களை களமிறக்கிவிட வேண்டும் என்கிற முனைப்பின் கீழ் பணியாற்றி வரும் ஆப்பிள் நிறுவனமானது, அது சார்ந்த வியாபார உக்தியை கொண்டுவரவுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மோடம் சிப் யூனிட்டை வாங்கும் நோக்கத்தின் கீழ், ஆப்பிள் நிறுவனமானது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது சாத்தியமாகும் பட்சத்தில், ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரதான ஸ்மார்ட்போன் கூறு ஒன்றின் மீதான கட்டுப்பாடு கிடைக்கும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தினால் கைப்பற்றப்படவுள்ள ஸ்மார்ட்போன் மோடம் சிப் யூனிட் ஆனது இன்டெல் நிறுவனத்தால் கைவிடப்பட்ட ஒரு யூனிட் என்பதும், இந்த வணிகத்தின் கீழ் இன்டெல் நிறுவனத்தின் காப்புரிமைகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் நிகழவுள்ளதாகவும், அடுத்த வாரம் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.