சந்திரயான் 2 விண்கலம் வரும் 22ம் தேதி பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஏவுதல் நிகழ்வை நேரில் பார்ப்பதற்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகிறது.
நிலவு பற்றிய ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ள சந்திரயான் 2 விண்கலம் கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவுவதற்கு கவுண்ட் டவுன் செய்யப்பட்டது.
ஆனால், சந்திரயான் விண்கலத்தை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதனால் கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து வரும் 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து 22ம் தேதி பகல் 2.43 மணிக்கு சரியாக விண்ணில் செலுத்தப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் ராக்கெட் ஏவுதலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பார்ப்பதற்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. பொதுமக்கள் https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த லிங்க் மாலை 6.00 மணிக்கு தான் செயல்படும். அதுவரையில் Registration is closed என்று தான் காட்டும்.
பொதுமக்கள் ராக்கெட் ஏவுதல்
நிகழ்வை அருகில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக பிரத்யேகமாக கேலரி
அமைக்கப்பட்டுள்ளது. ஏவுதள மையத்திற்கு அருகில்
உள்ள முதல் ரயில் நிலையம், சூலூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ஆகும். எனவே, சென்னை மற்றும் பிறமாவட்ட மக்கள் ரயில் மூலம்
ஆந்திராவிலுள்ள சூலூர்பேட்டை சென்றடைய வேண்டும். சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்வதற்கு
சுமார் 2 மணி நேரம் ஆகும்.