சியோமி, 2019 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே நோட் மற்றும் ப்ரோ வரிசையில் வரிசையாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. குறைந்த விலையில், அதிகமான சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால், வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வத்தினைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 17ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதனை முன்னிட்டு, இதற்கான முன்பதிவு ‘ஆல்பா சேல்’ என்ற பெயரில் சியோமி நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.

முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் 855 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த தொகை, ரெட்மி கே20 வாங்கும் போது தள்ளுபடி செய்யப்படும். ஆனால் விலை இன்றுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 17ம் தேதி அறிமுகம் செய்யும் போது தான், அதன் விலை எவ்வளவு, எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகும்.
48 மெகா பிக்சல் கேமரா, ஸ்நாப்டிராகன் 855 சிப் பிராசசர் அம்சங்களுடன் கூடிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் 28ம் தேதி பெய்ஜிங்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.