கொரோனா வைரஸ் பாதிப்பானது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் ஊன்றி உள்ளது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து என அனைத்து நாடுகளையும் ஒரு கை பார்த்து விட்டது.
வளர்ந்தநாடுகள் பலவும் கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறுகையில், தற்போது இந்த கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் கால் பதித்து அதன் தாக்கத்தினை அதிகரித்து வருகின்றது.
கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்துறை நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. மேலும் விளையாட்டுப் போட்டிகள், சினிமா போன்ற அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில் மக்களின் வேலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பிறகு, ஒவ்வொரு நாடும் அதன் பொருளாதாரத்தினை சீர் செய்யப் போராடும். இதனால் பெரும்பாலான துறைகள் பாதிப்பில் இருந்து வெளிவர எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்பதே தெரியாது.
இந்தநிலையில் சிசிஎஸ் இன்சைட் அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் சந்தை அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்மார்ட்போன் விநியோகம் 2020 இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் வரை சரிவடையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க முடியாமல் இருக்கையில், ஸ்மார்ட்போன்களை வாங்குவது என்பது சவாலான காரியமே ஆகும்.