சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் துவக்கத்தில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்திவிட்டது. துவக்கத்தில் சீனா அஜாக்கிரதையாக இருந்ததே இந்த நோய் இந்த அளவு தீவிரமாகப் பரவக் காரணமாகும்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 85,940 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2752 ஆக உள்ளது. இந்தநிலையில் சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில் லாவா நிறுவனம் குறித்த முக்கியத் தகவல் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்திய கைப்பேசி நிறுவனமான லாவா நிறுவனமானது சீனாவில் உள்ள அலுவலகங்களை மூட முடிவு எடுத்துள்ளதாகவும், மேலும் அதன் அலுவலகங்களை இந்தியாவுக்கு மாற்ற உள்ளதாகவும் கூறியுள்ளது.

லாவா நிறுவனத்தின் சி.ஈ.ஓ ஹரி ஓம் ராய், லாவாவின் தயாரிப்பு வடிவமைப்பு குழுவை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
கைப்பேசிகளை ஏற்றுமதி செய்யும் வேலையை இந்தியாவில் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் ரூ. 800 கோடி முதலீடு செய்ய லாவா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஆப்பிள் நிறுவனமும் சீனாவில் உள்ள கிளையின் சில பகுதிகளை இந்தியாவில் நிறுவ பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றது.