முன்பதிவு செய்யாத பயணிகள் ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு விஷயமாக இருந்து வந்தது, இதற்குத் தீர்வாக தற்பொழுது, இந்திய ரயில்வே துறை முதல் முறையாக இந்தியாவில் பயோமெட்ரிக் அடையாள முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இந்த பயோமெட்ரிக் முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

மேற்கு ரயில்வே பிரிவின் மும்பை மத்திய ரயில் நிலையம் மற்றும் பாந்த்ரா டெர்மினஸில் இந்த புதிய பயோமெட்ரிக் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு இடங்களை உத்தரவாதம் செய்வதற்காகவே இந்த பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறைப்படி பயணிகள் பயோமெட்ரிக் இயந்திரத்தில் அவர்களின் கை ரேகையை வைத்துப் பதிவு செய்தவுடன் டோக்கன் வழங்கப்படும். ரயில்வே காவல்துறை உதவியுடன், டோக்கன் இல் உள்ள பதிவ எண் படி பயணிகள் வரிசையில் நிறுத்தப்படுவர். இதனால் நெரிசல் இல்லாமல், குழப்பம் இல்லாமல் அனைவருக்கும் இடங்கள் முறையாய் வழங்கப்படும்.
மும்பை மத்திய ரயில் நிலையம் மற்றும் பாந்த்ரா டெர்மினஸ் நிலையத்திற்கு தலா 2 பயோமெட்ரிக் இயந்திரம் என மொத்தம் 4 இயந்திரங்களை இந்திய ரயில்வே முதல் கட்ட நடவடிக்கையாக நிறுவியுள்ளது. அமராவதி எக்ஸ்பிரஸ், ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கர்னாவதி எக்ஸ்பிரஸ், குஜராத் மெயில், கோல்டன் டெம்பிள் மெயில் போன்ற ரயில்களில் இந்த பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.