ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான பேஸ்புக் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை பேஸ்புக் வாங்குவதாக கடந்த சில மாதங்கள் தகவல் வெளியாகின.
அதன்படி தற்போது, பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்கை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்தது. அதாவது ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்கின் விலை சுமார் 43,574 கோடி ரூபாய் ஆகும்.

பேஸ்புக், இந்தியாவில் தங்கள் வணிகத்தினைத் துவக்கும் பொருட்டே ஜியோவுடன் இணைந்ததாகக் கூறியது. அதன்படி போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.
அதாவது ஜியோ மூலம் மளிகை கடைகளின் மூலம் வாட்ஸ்அப் வழியாகப் பயனர்களுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்ய முடிவெடுத்து, முதற்கட்டமாக ஜியோமார்ட் சேவை மும்பை பகுதியில் துவங்கப்பட்டது.
மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்த சேவையானது, இந்தியாவில் தற்போது மொத்தமாக 200 நகரங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. JioMart விரிவுபடுத்தப்பட்டது குறித்து ஜியோமார்ட் தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் ட்வீட்டரில் கூறியுள்ளார்.