கொரோனா வைரஸ் உலகின் சாதாரண நிலையினை புரட்டிப்போட்டுள்ளது. வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒருபுறம் ஒவ்வொரு நாடுகளில் நிதி திரட்டினாலும், மற்றொரு புறம் வைரஸை ஒழிக்க கடுமையான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பெரும் பணக்காரர்களும் பொருளதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் சுந்தர் பிச்சை தனது ஆல்பாபெட் நிறுவனம் சார்பில் 800 மில்லியன் டாலர் சுகாதார அமைப்புகள், சிறிய வணிகங்கள் மற்றும் கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் இந்த வைரஸால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் 340 மில்லியன் மதிப்புள்ள இலவச விளம்பரங்களை ஆல்பாபெட் வழங்கி, சிறு வணிகர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, கொரோனா தற்காப்புக்கான முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யத் திட்டமிடல் போன்றவற்றையும் சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் ஆகியோர் பொருளதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.