உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
உலகினை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கால் பதித்து தலை விரித்தாடுகிறது. இதுவரை இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஜிபிஎஸ் மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்வதன் மூலம், நாம் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது இந்த செயலியில் பதிவாகி இருக்கும்.
மேலும் இந்த செயலியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, கொரோனா அறிகுறிகள், கொரோனா பாதித்தோர் நிலவரம் என கொரோனா குறித்த பலவிதமான விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும் இதுபோன்ற ஒரு செயலி சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி வலைதளத்தில் கொரோனா மானிட்டரிங் என்ற பெயரில் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.