ஊரடங்கின்போது மதுப் பிரியர்கள் பல வகைகளில் போராடியதை ஒட்டி, இந்தியாவின் சில மாநிலங்களில் ஊரடங்கானது தளர்த்தப்பட்டு டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை செய்யப்பட்டது. ஆனால் மக்கள் யாரும் அரசு கூறிய விதிமுறைகளைப் பின்பற்றாததால், டாஸ்மாக் மீண்டும் மூடப்பட்டது.
இந்தநிலையில் கேரள அரசு ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்யும் முடிவினை எடுத்தது. அதாவது BevQ செயலியின் மூலம் கேரளாவில் மதுபானங்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த செயலியினை கேரள மாநில பானங்கள் கார்ப்பரேஷன் நேற்று அறிமுகப்படுத்தியது. ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் அறிமுகப்படுத்தப்படுத்திய இந்த செயலியானது ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் டவுண்ட்லோடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் டோக்கனைப் பெற பயனர் தனது பெயர், மொபைல் எண் மற்றும் பின்கோடு போன்றவற்றினைக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் இறுதியில் டோக்கன் வழங்கப்படும்.
இந்த டோக்கனை கொடுத்து மதுபான கடையில் வாடிக்கையாளர் மது வாங்க முடியும். இந்த டோக்கன்மூலம் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மதுபானம் வாங்க முடியும் என்றும் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிப்போருக்கு மதுபானம் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.