கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், பல லட்சக் கணக்கில் உயிர்களைக் காவு வாங்கியதோடு இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவையும் உலுக்கி வருகிறது.
கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்திய அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது நிலைமை தீவிரமானதன் காரணமாக ஊரடங்கானது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பால், மளிகை மற்றும் மெடிக்கல் ஸ்டோர்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் குறிப்பிட்ட தொழில்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்த தளர்வுகளில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட, ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி இந்த ஆன்லைன் சேவைகள் சில நிபந்தனைகளுடன் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து துவங்கலாம் என்று கூறப்பட்டது.
தற்போது இந்திய அரசு மீண்டும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைன் விற்பனைத் தளங்களான அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், பிக் பாஸ்கெட் போன்றவற்றிற்கு நேற்று மீண்டும் தடை விதித்துள்ளது. ஆனால் இதற்கான சரியான காரணம் ஏதும் கூறப்படவில்லை.