கடந்த மாத துவக்கத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியினை அறிமுகம் செய்தது. அதாவது இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஜிபிஎஸ் மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்வதன் மூலம், நாம் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது இந்த செயலியில் பதிவாகி இருக்கும்.
மேலும் இந்த செயலியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, கொரோனா அறிகுறிகள், கொரோனா பாதித்தோர் நிலவரம் என கொரோனா குறித்த பலவிதமான விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த செயலியினை 6 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், ஸ்மார்ட்போன் இல்லாத பயனர்கள் இந்த சேவையினைப் பயன்படுத்த முடியாமல் தவித்துவந்தனர்.

அவர்களைக் கருத்தில் கொண்ட அரசாங்கம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்லாது, ஃபீச்சர் போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளிலும் வழங்க முடிவெடுத்து, அதன் விளைவாக ஆரோக்ய சேது ஐவிஆர்எஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பும் நபர்கள் மொபைல் நம்பரில் இருந்து 1921 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவர்களின் எண்ணிற்கு கால் செய்து ஆரோக்கியம் சார்ந்த விவரங்களைச் சேகரிப்பர்.
மேலும் மற்ற நபர்களின் ஆரோக்கியம் சார்ந்த விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர்களின் மனக் குறையும் தீர்க்கப்பட்டுள்ளது.