உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,30,000 இனை நெருங்கும் அளவு உயிர் இழப்பு இருந்து வருகின்றது.
உலகினை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கால் பதித்து தலை விரித்தாடுகிறது. இதுவரை இந்தியாவில் 11,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் இந்த மாத துவக்கத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியினை அறிமுகம் செய்தது. அதாவது இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஜிபிஎஸ் மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்வதன் மூலம், நாம் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது இந்த செயலியில் பதிவாகி இருக்கும்.
மேலும் இந்த செயலியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, கொரோனா அறிகுறிகள், கொரோனா பாதித்தோர் நிலவரம் என கொரோனா குறித்த பலவிதமான விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த செயலியை அறிமுகம் செய்து 13 நாளில் 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், நேற்று காலை பாரத பிரதமர் உரையில் பிரதமர் நரேந்திர இந்த செயலியினை பதிவிறக்கம் செய்து உபயோகிக்க கூறவும், பலரும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.