குழந்தைகளுக்குப் போடப்படும் டயப்பரில் ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது பேம்பர்ஸ் நிறுவனம். ‘கனெக்டட் கேர் சிஸ்டம்’ என்கிற வசதி மூலம், குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்கும் சென்சாரை டயப்பரில் பொருத்தியுள்ளது பேம்பர்ஸ். ‘லுமி’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் மூலம் குழந்தைகளை சுலபமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
டயப்பர் ஈரமாகும்போது, அது குறித்து ஆப் ஒன்றுக்கு தகவல் அனுப்பிவிடும் பொருத்தப்பட்டுள்ள சென்சார். மேலும் குழந்தை எவ்வளவு நேரம் தூங்குகிறது, டயப்பர் அசுத்தமாக இருக்கிறதா, எப்போது உணவு கொடுக்க வேண்டும் போன்ற தகவல்களையும் இந்த ‘ஸ்மார்ட் டயப்பர்’ தெரிவித்துவிடுமாம்.

இந்த டயப்பரின் விலை குறித்து பேம்பர்ஸ் இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்காவில் சீக்கிரமே இது வெளியிடப்பட உள்ளது.
குழந்தைகளை கண்காணிக்கும் மற்றும் வளர்த்தலுக்கான தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்த துறையானது 2.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு வளர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமி வளர்ப்பில் ‘ஸ்மார்ட் தொழில்நுட்பம்’ அதிகமாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அது எந்த அளவுக்கு நல்லது என்பது குறித்து பெற்றோர்களும் முடிவெடுக்க வேண்டும்.